சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை வழக்கை, அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று எட்டுவழிச் சாலைத் திட்ட இயக்குநர் உச்சநீதிமன்றத்தில் ஜூன் 4-ஆம் தேதி மனுத்தாக்கல் செய்திருப்பது, மீண்டும் விவசாயிகளிடையே கடும் கொந்தளிப் பையும் மனஉளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
சேலம் - சென்னை இடையே புதிதாக, பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் கோடி ரூபாயில், பசுமைவழி விரைவுச் சாலை என்ற பெயரில் எட்டுவழிச்சாலை அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல்வாக்கில் தமிழக அரசு தொடங்கியது.
இத்திட்டத்திற்குத் தடை கேட்டு, தர்மபுரி கிருஷ்ணமூர்த்தி, சேலம் வீரபாண்டி மோகன சுந்தரம் உள்ளிட்ட 50 பேர், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த 8.4.2019-ஆம் தேதி, 8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பான அரசாணையை உடனடியாக ரத்துசெய்து எடப்பாடி அரசுக்கு சம்மட்டி அடி தீர்ப்பை வழங்கியது.
உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தமிழக அரசும் அதில் தன்னை இணைத்துக்கொண்டது. உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றத்தின் தடையுத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க மறுத்துவிட்டது.
அதன்பிறகு என்ன நடந்ததோ, இடைக்கால தடைவிதிக்க மறுத்த மூன்றே மாதத்திற்குள்ளாக நீதிபதி ரமணா திடீரென்று அந்த அமர்விலிருந்து விடுவிக்கப்பட்டு, நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான அமர்வு பொறுப்பேற்று விசாரணை நடத்தி வந்தது. இதையடுத்து வழக்கில் அடுத்தகட்ட முன்னேற்றம் ஏதுமில்லாமலிருந்த நிலையில், இடையில் கொரோனா ஊரடங்கால் நீதிமன்ற செயல்பாடுகளும் முடங்கின. இந்நிலையில், எட்டுவழிச்சாலைத் திட்ட இயக்குநர் திடீரென்று, இந்த வழக்கை அவசரமாக விசாரிக்கவேண்டு மென்று கோரி, ஜூன் 4, 2020-ல் ஒரு மனுவைத் தாக்கல்செய்துள்ளார். இந்த புதிய மனுத்தாக்கலால் விவசாயிகள் கடும் கொந்தளிப்பு அடைந்துள்ளனர்.
மனுத்தாக்கல் விவரத்தை அறிந்த சில மணி நேரங்களில் சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் விவசாயிகள் அவரவர் வீடுகள் முன்பு குடும்பத்துடன் கையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டனப் போராட்டம் நடத்தினர்.
இதுபற்றி தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன், விவசாயி மோகனசுந்தரம் ஆகியோர், ""சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டம் என்ன நோக்கத்திற்காக போடப்படுகிறது என்பது குறித்து இதுவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களிடம் தெளிவுபடுத்தவில்லை.
உண்மையில் கஞ்சமலை, கவுந்திமலை, வேடியப்பன் மலைகளிலுள்ள கனிம வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் சுரண்டியெடுத் துச் செல்வதற்காகவே இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டுவரத் துடிக்கின்றன. அதற்காகவே ரஷ்யாவைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களை தொழில் தொடங்க அழைக்கின்றனர். எட்டுவழிச்சாலை வந்தால் தொழிற்சாலைகள் வரும் என்கிறார் முதல்வர். தொழிற்சாலைகள் வரும்; ஆனால் சோறு வருமா? எங்கள் வேதனைகளை முதல்வர் உணரவே இல்லை. இந்த திட் டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிடவேண் டும்'' என்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க, எட்டுவழிச்சாலைக்கு தடைகேட்டு வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான தர்மபுரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் அவர் தரப்பு வழக்கறிஞர் பிரபு, விர்ச்சுவல் நடைமுறைகளைக் கைவிட்டு நேரடி விசாரணைக்கு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், ஜூன் 5ம் தேதி உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
இதுபற்றி வழக்கறிஞர் பிரபுவிடம் கேட்டபோது, ''எதையெல்லாம் அவசர வழக்காக விசாரிக்கலாம் என்று சில வகைப்பாடுகள் இருக் கின்றன. பிணையில் விடுவது, கஸ்டடி எடுப்பது, அரசு நிர்வாகம் போன்ற விவகாரங்களில்தான் அவசரமாக விசாரிக்கப்படும். எந்த வகையில் ஒரு வழக்கு மிக அவசரம் என்பது குறித்து நிரூபிக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. அண்மையில், அவசர வழக்கு என்று நிரூபிக்கத் தேவையில்லை. அதைப்பற்றி விவரித்தாலே போதும், வழக்கை நடத்தலாம் என்றது உச்சநீதிமன்றம். ஜூன் 1ம் தேதி, குறிப்பிட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து இருதரப்பு கட்சிக்காரர்களும் ஒத்திசைந்து வந்தாலே அந்த வழக்கை விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது.
வரும் 6.7.2020ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருவதாக உச்சநீதிமன்ற இணையதளத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேபணை தெரிவித்து கடிதம் சமர்ப்பித்திருக்கிறோம். இந்த வழக்கு தொடர்பாக, இரு தரப்பிலும் பல்லாயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இப்படியான சூழலில் இந்த வழக்கை விர்ச்சுவல் (மெய்நிகர்) நீதிமன்றத்தில் விசாரிப்பது உகந்ததல்ல. நேரடியாக இருதரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராகி விசாரித்தால்தான் நல்லது'' என்றார்.
கொரோனா நிவாரணத்திற்காக கூடுதல் நிதி செலவிடப்பட இருப்பதால் அடுத்த ஓராண்டுக்கு புதிய திட்டங்கள் எதுவுமில்லை என்கிறது நடுவண் அரசு. மேலும், தவறான பொருளாதாரக் கொள் கைகளால் கடந்த 40 ஆண்டுகள் இல்லாதவகையில் நாட்டின் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில், மக்களுக்கு பிரயோஜனம் ஆகாத எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு மட்டும் எங்கிருந்து நிதி வரும்? என்ற வினாவும் எழாமலில்லை.
-இளையராஜா